'தமிழ் மொழியே படைப்பாளியை உருவாக்குகிறது'

தமிழ் மொழியே படைப்பாளியை உருவாக்குகிறது என்று காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா பேசினார்.

Update: 2022-12-22 19:00 GMT

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மானியக்குழு சிறப்பு ஆய்வு திட்டத்தின் கீழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா எழுதிய "பாமர இலக்கியம்" என்ற நூலின் திறனாய்வு விழா தமிழ் துறை சார்பில் பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமை தாங்கினார். எழுத்தாளர் ரா.முத்துநாகு, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பெ.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பாமர இலக்கியம் நூல் குறித்துத் திறனாய்வு உரை ஆற்றினர்.

இதைத்தொடர்ந்து திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா பேசுகையில், ஒரு படைப்பாளியை, தமிழ் மொழியே உருவாக்குகிறது என்பது எனது அனுபவம். நான் சிறுவயதில் கண்டதை, கேட்டதை அனுபவித்ததை எல்லாம் பாமர இலக்கியம் நூலில் பதிவு செய்துள்ளேன். கிராமத்து வேர்கள் தான், இந்த நூலை என்னை எழுத வழிநடத்தின. மக்கள் பேசும் மொழியிலேயே மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை பதிவு செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தேன். என் தாய்த்தமிழ் என்னை கரம்பிடித்து அழைத்து சென்றது. வருங்கால இளைய சமுதாயத்தை தமிழ் பண்பாட்டின் வழியாக பண்படுத்த வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் இலட்சியம். என் தாய்த்தமிழ், என்னை இன்னும் எழுது, எழுது என்று தூண்டிக்கொண்டே இருக்கிறது என்றார்.

விழாவில் முதுகலை தமிழ் 2-ம் ஆண்டு மாணவி சுகந்தி, முதலாமாண்டு மாணவி கீதாப்பிரியா ஆகியோர் பாமர இலக்கிய நூலை பற்றி பேசினர். தமிழ் இந்திய மொழிகள் புலத்தலைவர் முத்தையா, தமிழ்த்துறை பேராசிரியர் பா.ஆனந்தகுமார், உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்