தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.;
கொரடாச்சேரி:
திருவாரூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சி மொழி
தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் 7 நாட்கள் ஆட்சி மொழி சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம் நேற்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை ஒருவார காலம் அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூர் பழைய ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி, புலவர் சண்முக வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பெயர் பலகை
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு வகையில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.