தமிழ்மொழியை பாதுகாத்து செம்மைப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
தமிழ்மொழியை பாதுகாத்து செம்மைப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
தமிழ்க்கனவு நிகழ்ச்சி
விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழின் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. துரை.ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:-
மாணவர்கள் நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்த பரப்புரை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் மரபும்- நாகரீகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை, பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள், தமிழ்நாட்டின் கல்விப்புரட்சி ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.
தமிழ்மொழியை பாதுகாக்க...
"மாபெரும் தமிழ்க் கனவு" பரப்புரையின் மூலம் எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, சமஸ் ஆகியோர் தமிழின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் அவர்கள் புலமைபெற்ற துறை சார்ந்தும் எடுத்துரைத்தார்கள். அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியான தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் மரபு, வரலாற்றினை பாதுகாப்பதற்கு மொழி முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழி மீதான பற்றுதலை வளர்த்துக்கொள்வதோடு, தங்கள் இனம் சார்ந்த வரலாற்றினையும் காத்திட வேண்டும்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப்பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் உள்ளார்ந்த ஆற்றல் திறனை வளர்த்துக்கொள்வதோடு, நமது தாய்மொழியான தமிழ்மொழியை பாதுகாத்து செம்மைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.