தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி

நீடாமங்கலம் அருகே தமிழ் கனவு சொற்பொழிவு என்ற நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.

Update: 2023-03-23 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே தமிழ் கனவு சொற்பொழிவு என்ற நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.

தமிழ் கனவு

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மரபின் வளமை அதன் பண்பாட்டின் பெருமையும், சமூக சமத்துவம், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகள் குறித்து இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த மாதம் 23-ந்தேதி மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக இங்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம்

அதனை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து தொடர்புடைய துறையினரால் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இதனை மாணவ, மாணவிகள் பார்த்து உங்களுடைய சந்தேகங்களை தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டு பயன்பெற வேண்டும் என்றார்.

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் வாகை சூடும் வரலாறு அரை நூற்றாண்டு ஆட்சி, ஏற்றமா? ஏமாற்றமா? என்பது குறித்த கலந்துரையாடல் நடந்தது.

அதனைத்தொடர்ந்து, கேள்வி-பதில் நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி கேட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். முன்னதாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழிற்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.

கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி வரை நடைபெறவுள்ள புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் சாருஸ்ரீ தனது கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி), தாசில்தார் ஜீவனாந்தம், கல்லூரி முதல்வர் ராமசாமி, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்