நெய்வேலியில்தமிழ்க்கனவு பிரசார நிகழ்ச்சி நாளை நடக்கிறது
நெய்வேலியில் தமிழ்க்கனவு பிரசார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான "மாபெரும் தமிழ்க்கனவு" பிரசார நிகழ்ச்சி 3-வது கட்டமாக கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 16-ல் உள்ள சமூக கூடத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள 15 கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, முன்னோடி வங்கி, தாட்கோ, நூலக துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி ஆகிய துறைகள் சார்பாக தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.