ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

Update: 2023-03-15 18:45 GMT

கோவை

ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த ரவுடி கும்பல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ

கோவை கோர்ட்டு அருகே கோகுல் என்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி கவுதம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் "பிரண்ட்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தபடியும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றபடியும் வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் "எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்" என்ற வன்முறையை தூண்டும் பாடல் வரிகளுடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

கஞ்சா வழக்கில் கைதானவர்

மேலும் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களில்கவுதம் கும்பலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின் தொடர்ந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா (வயது 23) என்பதும், இவர் ஏற்கனவே கோவையில் கஞ்சா வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது. கோவை மாநகர போலீசார் தமன்னா மீது ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் திருப்பூர், விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டு வினோதினி என்ற தமன்னாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடி வரும் நிலையிலும் கூட தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டார்.

மீண்டும் வீடியோ வெளியிட்டார்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிகிற்காக செய்யப்பட்டதுதான் இந்த வீடியோக்கள். தற்போது தான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. 6 மாத கர்ப்பிணியாக, எனது கணவருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், குறிப்பிட்டு இருந்தார்.

கைது

இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்றிரவு சேலம் சங்ககிரி விரைந்தனர்.

பின்னர் அங்கிருந்த தமன்னாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

பிடிவாரண்டு உத்தரவு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே தமன்னா பீளமேடு போலீசார் பதிவு செய்து இருந்த கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்து, தலைமறைவாக இருந்தவர். இந்த வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு உள்பட கோவையில் உள்ள மற்ற வழக்குகள் தொடர்பாக தமன்னாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கவுதம் என்ற ரவுடி கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

தற்போது கர்ப்பமாக இருப்பதாக தமன்னா கூறுவதால் அவர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். ரவுடி கும்பலுடன், கஞ்சா விற்பனையில் பழக்கமா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். மிரட்டல் வீடியோ வெளியிட்டு தமன்னா கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்