எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகை
எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பேரூராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து தாலுகா அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தாலுகா அலுவலகம் முற்றுகை
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் நாம்தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். அந்த அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள சுடுகாடு 3 ஏக்கர் 41 செண்ட் பரப்பளவு கொண்டதாகும். தற்போது பெரும்பாலான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சுடுகாடு இடத்தை முறையாக அளவீடு செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்குள்ள ஓடை பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தையும் முறையாக நில அளவையர் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டும். தற்போது சுடுகாட்டில் நடைபெற்றுவரும் சுற்றுசுவர் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். முறையாக சுடுகாடு இடத்தை அளவீடு செய்த பின்னர் சுற்றுசுவர் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
தாசில்தார் உறுதி
போராட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பூ.பாண்டி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பாலாஜி, தொகுதி செயலாளர் ரமேஷ்குமார், வழக்கறிஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார், தொகுதி இணை செயலாளர் அழகு முனியசாமி, புதூர் ஒன்றிய செயலாளர் சண்முகதாஸ் உள்படபலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அந் மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், சுடுகாடு மற்றும் ஓடை ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பேரூராட்சி அலுவலகத்தில்...
அங்கிருந்து கலைந்து சென்ற அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.