ஆந்திராவுக்கு அழைத்து சென்று காதல் மனைவி கொலையா? - கணவரிடம் போலீசார் விசாரணை
காதல் மனைவியை ஆந்திராவுக்கு அழைத்து சென்று கணவன் கொலை செய்தாரா என்று செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
செங்குன்றம்,
சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம்- பல்கீஸ் தம்பதியினர். இவர்களுடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது19). தமிழ்ச்செல்வியும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த மதன் (வயது22) ஆகிய இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் தன் மகளை காணவில்லை என செங்குன்றம் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வியின் தாயார் பல்கீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் மதனிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் தனது காதல் மனைவியை ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு அருவிக்கு அழைத்துச் சென்று அங்கு கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து வந்து விட்டதாகவும், அவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை என்றும் போலீசாரிடம் மதன் தெரிவித்தார்.
இதை அடுத்து போலீசார் சித்தூர் அருவிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்செல்வியை மதன் கொலை செய்தாரா அவர் என்ன ஆனார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.