காவிரியில் இருந்து புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி
வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி காவிரியில் இருந்து புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. ஆற்றின் வடக்கு பக்கம் உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோவில் உள்ளது. புகழ்பெற்ற குரு பரிகார தலமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக தல புராணம் கூறுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலின் குடமுழுக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேதியர்கள் மந்திரம் கூற கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு 5 யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தில் குதிரைகள், ஒட்டகம், பசு மற்றும் காளை மாடுகள் பங்கேற்றன. சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், சிறுவர்கள் கடவுளர்கள் போல் வேடம் அணிந்தபடி பங்கேற்ற நிலையில் வேத மந்திரங்கள் மற்றும் தேவார பதிகங்கள் ஓதியபடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே கோவிலை வந்தடைந்தது. தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் முன்னிலையில் புனித கடங்கள் கோவிலுக்குள் எடுத்துவரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.