தமிழ்நாட்டில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுங்கள் -சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுங்கள் சீமான் வலியுறுத்தல்.

Update: 2022-06-06 22:16 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே, மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது கஞ்சா பயன்பாட்டினை கட்டுப்படுத்த தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ளது, போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'சிறப்பு ஆலோசனை வகுப்புகளை' உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்