தாசில்தாரின் கார் கண்ணாடி உடைப்பு
தாசில்தாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.;
செந்துறை தாசில்தாராக இருப்பவர் விக்டோரியா பாக்கியம். இவர் அரியலூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து அரசு காரில் அரியலூருக்கு வந்தார். அந்த வாகனத்தை டிரைவர் பழனிவேல் ஓட்டி வந்தார். அரியலூரில் உள்ள வீட்டில் தாசில்தார் இறங்கிய பின்னர், டிரைவர் பழனிவேல் அந்த காரை செந்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு ஓட்டிச்சென்று, அங்கு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல் நேற்று காலை அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கண்டிப்பு காரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரேனும் காரின் கண்ணாடியை உடைத்தார்களா? அல்லது வேறு யாரேனும் உடைத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் செந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.