ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ரியல் எஸ்டேட் தொழில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது 55). இவர் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் சம்பந்தமாக கடந்த 21-ந் தேதி ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தென்னரசுவை சந்தித்தார். அப்போது பட்டா மாறுதலுக்காக ரூ.4 லட்சம் லஞ்சமாக கேட்ட நிலையில், பேரம் பேசி இறுதியாக ரூ.3 லட்சம் தந்தால்தான் பட்டா மாற்றி தருவேன் என தாசில்தார் தென்னரசு கூறியுள்ளார். மேலும் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனை சந்தித்து புகார் தெரிவித்தார்.
அவர் கொடுத்த அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்துக்கான பணநோட்டுகளுடன் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தாசில்தார் தென்னரசு இல்லாததால் அவர் திரும்பி சென்றார்.
பின்னர் நேற்று தாசில்தார் தென்னரசு அலுவலகத்தில் இருந்தபோது கருப்பையா, தான் கொண்டு சென்ற ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் நோட்டுக்களை கொடுத்தார். அதை தாசில்தார் தென்னரசு வாங்கிக்கொண்டார்.
தாசில்தார் கைது
அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி தலைமையிலான போலீசார் தாசில்தார் தென்னரசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது மேஜையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் இருந்தது. அந்த பணம் பற்றி தென்னரசிடம் விசாரித்தபோது அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே தாசில்தாரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டி கிடந்தது. ஆனாலும், அந்த, வீட்டில் சோதனை நடத்த தொடர் நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.