வேப்பூர் அருகேஊஞ்சல் ஆடிய மாணவன் சேலையில் சிக்கி மூச்சுத்திணறி சாவு
வேப்பூர் அருகே ஊஞ்சல் ஆடிய மாணவன் சேலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தான்.
ராமநத்தம்,
சாப்ட்வேர் என்ஜினீயர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சக்தி(வயது 11) என்ற மகன் இருந்தான். வெங்கடேசன் பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது கோடை விடுமுறையையொட்டி வெங்கடேசன், சொந்த ஊருக்கு வந்திருந்தார். மேலும் அவர் இன்று(திங்கட்கிழமை) பெங்களூரு செல்ல முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் சுமதி, தனது தோழிகளை பார்ப்பதற்காக கணவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூருக்கு சென்றார். அப்போது மகன் சக்தியை, அவர்கள் வெங்கடேசனின் தாய் முருவாயியிடம் விட்டு சென்றனர்.
மூச்சுத்திணறல்
அந்த சமயத்தில் சக்தி, வீட்டில் இருந்த மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி, அதில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் கட்டியிருந்த சேலை சக்தியின் மேல் முழுவதும் சுற்றியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சக்தியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவன், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்தி பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து விட்டு 6-ம் வகுப்பு செல்ல இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.