2 பேருக்கு பன்றி காய்ச்சல்உறுதி செய்யப்பட்டுள்ளது

2 பேருக்கு பன்றி காய்ச்சல்உறுதி செய்யப்பட்டுள்ளது;

Update: 2022-09-19 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

வைரஸ் காய்ச்சல்

திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பது குழந்தைகளுக்கு மத்தியில் வேகமாக பரவி வந்தது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு ஏற்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்த உத்தரவு

அதேபோன்று பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பள்ளி மாணவன் படிக்கும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் தண்ணீரில்தான் உருவாகின்றன. எனவே வீடுகளிலும், வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்காமலும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைத்தும் உபயோகப்படுத்த வேண்டும். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தனித்தனி காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கை

அதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு ஆஸ்பத்திரியிலும் 10 படுக்கைகள் கொண்ட காய்ச்சலுக்கான தனிமைப்படுத்துதல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் மற்ற நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்