அமைச்சராக பதவியேற்பு: உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி சாதனைகளை படைப்பார் சேலத்தில் நடிகர் விஷால் பேட்டி
‘அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி சாதனைகளை படைப்பார்’ என்று சேலத்தில் நடிகர் விஷால் கூறினார்.
சேலம்,
விஷால் பேட்டி
சேலத்தில் லத்தி திரைப்பட அறிமுக விழா மற்றும் விஷால் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்மாப்பேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அது தற்போது நனவாகி உள்ளது. அவர் அமைச்சராக பதவி ஏற்றதற்கு நண்பன் என்ற முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல்-அமைச்சரின் மகன் என்று எந்த இடத்திலும் பெயரை பயன்படுத்தாமல் தனக்கென தனி அடையாளத்துடன் வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு தகுதி வாய்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
சாதனைகளை படைப்பார்
வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக எழுந்துள்ள பேச்சு. ஆனால் தனக்கு ஒதுக்கிய துறையில் உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி சாதனைகளை படைப்பார். அப்போது, இதுபோன்ற பேச்சுகள் காணாமல் போகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அப்படி பார்த்தால் அவர் அமைச்சராக இருந்தபோது, மேடைகளில் திரைப்பட பாடல்களை பாடி இருக்கக்கூடாது.
கலை என்பது அனைவருக்கும் பொதுவானது. அமைச்சர் பதவி என்பது உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்திற்கு எந்த விதத்திலும் தடை போடாது. எனது லத்தி படத்திற்காக விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளில் இருந்தும் தலா ஒரு ரூபாய் என்ற அளவில் விவசாயிகளுக்கு வழங்குவேன். ஏழை குழந்தைகளின் கல்விக்காக என்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்வேன்.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் குறித்து பேசுவதற்கு என் மீது வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலரின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
என்னிடம் சிலர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு நடிக்க கேட்டார்கள். அதற்கு நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான வழிகளில் கிடைக்கும் பணம் நிலைக்காது. நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் விஜயகாந்தின் பெயர் நிச்சயம் இடம்பெறும். அது தொடர்பாக அனைத்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம்.
இவ்வாறு விஷால் கூறினார்.