தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவையொட்டி தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது.

Update: 2023-06-02 19:06 GMT

அருப்புக்கோட்டை,

பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவையொட்டி தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது.

வைகாசி விசாக விழா

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் செங்கமலத்தாயார்- வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான வேணுகோபால சுவாமி குதிரை வாகனத்தில் தேரோடும் வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை சப்பரத்தில் இழுத்து சென்றும், தோள்களில் சுமந்து சென்றும் தேரோடும் வீதிகளை சுற்றி வலம் வந்தனர். அப்போது மேள தாளங்கள் முழங்க, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சுவாமியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போல் பக்தர்கள் வேடமணிந்து தோல் பையில் தண்ணீரை நிரப்பி சுவாமியின் மீதும், பக்தர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கள்ளன் விரட்டும் நிகழ்ச்சி

அதனை தொடர்ந்து கள்ளன் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற வீதி உலா நிகழ்ச்சியில் பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீதி உலா நிகழ்ச்சியை முன்னிட்டு பாளையம்பட்டி வழியாக மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் 2 மணி நேரத்துக்கு மேலாக புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட் மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்