சுவி ஈமு பண்ணை பங்குதாரர்களின் வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை

சுவி ஈமு பண்ணை பங்குதாரர்களின் வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-11-19 23:50 GMT

சுவி ஈமு பண்ணை பங்குதாரர்களின் வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஈமு பண்ணை மோசடி

கடந்த 2012-ம் ஆண்டு சுவி ஈமு பண்ணை பெருந்துறை பவானிரோடு அண்ணா வீதியில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக பெருந்துறை சிலேட்டர்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 42), அவருடைய மனைவி இந்துமதி உள்பட 8 பேர் இருந்தனர். பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறப்பட்டது. மொத்தம் 1,063 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.30 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரம் முதலீடு பெறப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட பங்குதாரர்கள் தலைமறைவானார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்களை கொடுத்தனர். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜப்தி

இந்த நிலையில் சுவி ஈமு பார்ம்ஸ் நிறுவன பங்குதாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பெருந்துறை சிலேட்டர்நகரில் உள்ள இந்துமதிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டையும், அவரது தாய் பெயரில் பெருந்துறை கற்பக கணபதிநகரில் உள்ள ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த வீடுகளை சுவி ஈமு பண்ணை நிறுவனத்தின் சொத்துகளாக கணக்கில் சேர்க்கப்பட்டு கோர்ட்டு உத்தரவின்படி ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்