தோட்டக்கலை ஊழியர் பணி இடைநீக்கம்

நெல்லையில் மானிய விலையில் டிராக்டர் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தோட்டக்கலைத்துறை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-09 20:18 GMT

நெல்லையில் மானிய விலையில் டிராக்டர் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தோட்டக்கலைத்துறை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மோசடி

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் தோட்டக்கலை துறை மூலம் டிராக்டர் வாங்குவதற்காக சேரன்மாதேவியில் உள்ள அந்த துறை ஊழியர் பேச்சிமுத்து என்பவரை அணுகினார். அவர் துறை மூலம் மானிய விலையில் டிராக்டர் வாங்கி தருவதாக கூறிஉள்ளார்.

இதற்காக முத்துராமன் ரூ.4 லட்சத்தை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு டிராக்டர் விற்பனை நிலையத்தில் செலுத்தினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் டிராக்டர் வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் திருப்பி ெகாடுக்கவில்லை.

இந்த மோசடி குறித்து முத்துராமன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் விசாரணை நடத்தி, தோட்டக்கலை ஊழியர் பேச்சிமுத்து மற்றும் டிராக்டர் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் நேற்று ஊழியர் பேச்சுமுத்துவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தோட்டக்கலைத்துறை சார்பில் பவர் டில்லர், மினி டிராக்டர் ஆகியவை மட்டுமே வாங்குவதற்கு உதவி செய்யப்படுகிறது. பெரிய டிராக்டர், பெரிய எந்திரங்கள் எதுவும் வாங்குவதற்கு உதவிகள் வழங்கப்படுவது இல்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்