மின் இணைப்பில் திடீர் பழுது; பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ரோப்காரில் பழுது
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதன்மூலம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி ஏராளமான பக்தர்களும் சென்று வருகின்றனர். இதில் கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் அதிகமாக காற்று வீசும்போது சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக காற்று பலமாக வீசுவதால் அவ்வப்போது ரோப்கார் சேவை விட்டுவிட்டு இயங்கி வருகிறது.
இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்றது. இதையொட்டி அன்றைய தினம் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடந்தது. தொடர்ந்து அடுத்த நாள் முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது. அதன்படி, நேற்று காலையில் வழக்கம்போல் ரோப்கார் சேவை தொடங்கியது. இதற்கிடையே 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் அவதி
ஆனால் ரோப்கார் நிலையத்துக்கு செல்லும் மின்இணைப்பில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் ரோப்கார் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இணை ஆணையர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் மின்பொறியாளர்கள் மற்றும் ரோப்கார் ஊழியர்கள் அங்கு வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் மாலை வரை ரோப்கார் இயக்கப்படவில்லை.
இதனால் ரோப்காரில் செல்ல டிக்கெட் எடுத்தவர்களும், டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த பக்தர்களும் கடும் அவதி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், படிப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து பக்தர்கள் ரோப்கார் நிலையத்தில் இருந்து பிற பகுதிக்கு நடந்தே சென்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதற்கிடையே மாலை 4.30 மணிக்கு பிறகு ரோப்கார் நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பிறகு ரோப்கார் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.