ஆண்டிப்பட்டி அருகே ரேஷன் கடை ஊழியர் பணி இடைநீக்கம்
ஆண்டிப்பட்டி அருகே ரேஷன் கடை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி அருகே மறவப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆண்டிப்பட்டி பொதுவினியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சரவணன், மறவப்பட்டி ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய சென்றார். அப்போது அந்த கடையில் விற்பனையாளர் கார்த்திக் பணியில் இல்லை. இவருக்கு பதில் வெளிநபர்கள் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பேரில், விற்பனையாளர் கார்த்திக்கை பணி இடைநீக்கம் செய்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் நேற்று உத்தரவிட்டார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இணைப்பதிவாளர் தெரிவித்தார்.