பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-08-03 15:21 GMT

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020-ம் ஆண்டு ஞானப்பிரகாசம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் 19-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, ஐகோர்ட்டு உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும், அப்போதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 2 கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி அரசு தரப்பில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு சிறை தண்டனை வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்