சேலம் மாவட்டம் தோரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக இருந்தவர் அப்புசாமி. இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.3½ கோடி வரை கடன் வழங்கி உள்ளார். அந்த கடனை சரிவர வசூலிக்கவில்லை என அப்புசாமி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஓமலூர் சரக கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர். கொடுத்த கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அப்புசாமியை பணி இடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். நாளை மறுநாள் (30-ந் தேதி) பணி ஓய்வுபெற இருந்த நிலையில் அப்புசாமி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.