கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்

தனியார் நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா வழங்கிய புகாரில் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-05-30 18:08 GMT

சிவகங்கை, 

தனியார் நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா வழங்கிய புகாரில் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தே.புதுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை நில உரிமையாளருக்கு தெரியாமல் சுமார் 69 ஏக்கரை 5 பேருக்கு வருவாய்துறை அதிகாரிகள் பட்டா போட்டுக் கொடுத்தார்களாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்துக்கழுவன் விசாரணை நடத்தினார்‌.

அப்போது எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தவறாக பட்டா கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மானாமதுரை மண்டல துணை தாசில்தார் சேகர் மற்றும் தே.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகிய 2 பேரும் கடந்த 19-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

உத்தரவு

மேலும் இந்த புகார் குறித்து தொடர் விசாரணை நடத்த சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்துகழுவனுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இந்தநிலையில் தே.புதுக்கோட்டையில் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய ஞானசேகரன் மற்றும் கிராம உதவியாளர் கணேஷ்வரி ஆகியோரையும் பணி இடைநீக்கம் செய்து சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்து கழுவன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகரன் நாளை (புதன்கிழமை) பணி ஓய்வு பெற உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்