பரமத்திவேலூர் அருகே லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த தீபா (வயது 43) கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (45). விவசாயி. இவர் பட்டாவில் பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் தீபா, ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்பேரில் ஜெகநாதன் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீபாவை கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை பேரில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, கிராம நிர்வாக அலுவலர் தீபாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.