தோட்டத்தில் மயங்கி விழுந்து விவசாயி சாவு?
தாராபுரம் அருகே 2 தேங்காய்க்காக நடந்த வாக்குவாதத்தில் விவசாயி மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தாராபுரம்
தாராபுரம் அருகே 2 தேங்காய்க்காக நடந்த வாக்குவாதத்தில் விவசாயி மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து மருமகள் மற்றும் பேத்தியிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் முத்தையம்பட்டியை அடுத்த ஓட்டக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 86). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சாமிநாதன் 50). இளைய மகன் நடராஜ் (55).
நடராஜின் மனைவி ஈஸ்வரி (50). மகள் லாவண்யா (25). இவர் பல்லடம் வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
சாமிநாதன் குடும்பத்திற்கும், நடராஜன் குடும்பத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தசாமி தனது தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த 2 தேங்காய்கள் சாக்கடையில் கிடந்தது. அவற்றை கோவிந்தசாமி எடுத்து மூத்த மகன் சாமிநாதன் தோட்டத்தில் வீசியுள்ளார்.
சாவு
இதனை பார்த்து கொண்டிருந்த நடராஜனின் மனைவி ஈஸ்வரியும், மகள் லாவண்யாவும், எங்கள் தோட்டத்தில் கிடந்த தேங்காயை எடுத்து சாமிநாதன் தோட்டத்திற்குள் எதற்காக வீசினீர்கள் என்று கோவிந்தசாமியிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவிந்தசாமி திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் கோவிந்தசாமி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோவிந்தசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த மர்ம சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரி, லாவண்யா ஆகியோரிடம் விசாரித்து வருகிறார்கள்.