ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் கைது
கடலூரில் வீட்டுமனையை அளந்து பட்டா வழங்குவதற்காக எலக்ட்ரீசியனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 49). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுதா. செல்வக்குமாருக்கு சொந்தமாக பாதிரிக்குப்பத்தில் வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
மேலும் பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த கிராம உதவியாளர் மாரியம்மாள் (44), கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த சர்வேயர் பஞ்சநாதன் (50) ஆகியோரை சந்தித்து தனது வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
அதற்கு மாரியம்மாள், பஞ்சநாதன் ஆகியோர் தங்களுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா தருவோம் என கூறியுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார், இதுபற்றி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சர்வேயர், உதவியாளர் கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று மதியம் செல்வக்குமார், பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மாரியம்மாளிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார், மாரியம்மாளை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அங்கிருந்த சர்வேயர் பஞ்சநாதனையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள், பஞ்சநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
லஞ்ச வழக்கில் கிராம உதவியாளர், சர்வேயர் கைதான சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.