முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ரூல்கர்வ் என்ற விதியின் கீழ், பருவமழை காலத்துக்கு ஏற்ப அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
ரூல்கர்வ் விதிப்படி அணையில் வருகிற 31-ந்தேதி நீர்மட்டத்தை 139.80 அடியாகவும், செப்டம்பர் 20-ந்தேதி 142 அடியாகவும் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,810 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 933 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
பேபி அணை
இந்நிலையில், பெரியாறு-வைகை வடிநில வட்ட மதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பழனிசாமி, முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தார். பிரதான அணை, பேபி அணை, கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றும் மதகுகள், சுரங்கப் பகுதி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
அப்போது பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட வேண்டிய மரங்களை பார்வையிட்டார். பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பெற வேண்டிய அனுமதிகள், அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்ட பரிந்துரைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பென்னிக்குயிக் சிலை
அதுபோல், தேக்கடியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் மதகு, மின் உற்பத்தி நிலையத்துக்கு ராட்சத குழாய்களில் தண்ணீர் வரும் பகுதிகள், ராட்சத குழாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடும் போர்பே அணை ஆகிய இடங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக லோயர்கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த ஆய்வின் போது அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.