சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்:சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்தனர்.;
கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சிறந்த சுற்றுலா தலம், புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் தண்ணீர் கலந்து அருவியாக கொட்டுகிறது.
இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கிடையே அருவி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதற்கிடையே அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.