மேட்டூர் அணையின் உபரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு கொண்டு வர வலியுறுத்தல்

மேட்டூர் அணையின் உபரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-29 19:00 GMT

விவசாய மின் இணைப்பு பெற...

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள், கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை பேசுகையில், புதிய விவசாய மின் இணைப்பு பெற கடந்த 1-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் இதற்கு முன்பு நேரடியாக பதிவு செய்த விவசாயிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும், என்றார்.

இயற்கை விவசாயம்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை தொகையை விரைந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். திருவள்ளுவர் உழவர் மன்றத்தின் தலைவர் வரதராஜன் பேசுகையில், பூலாம்பாடி பாசன ஏரியான கீரவாடி ஏரியின் 90 ஏக்கரில் 7 ஏக்கர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடம் பசுந்தாள் உரப்பண்ணைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் தற்போது பயன்பாடின்றி தனியாருக்கு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்து யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்க நீண்ட கால குத்தகையில் விடப்பட்டுள்ளது. எனவே அந்த 7 ஏக்கரையும் ஏரிக்கு முழு கொள்ளளவு நீர்ப்பரப்புக்கு உகந்த வகையில் ஆவண செய்ய வேண்டும்.

உபரி நீர்

விவசாயி ராமராஜ் பேசுகையில், வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் உரங்கள், வேளாண் கருவிகள் மற்றும் விதைகளை ஆய்வு செய்து தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி ராஜூ பேசுகையில், மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூரில் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் அமைக்க வேண்டும். எண்ணெய் பனை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசுகையில், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு வந்து ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் பேசுகையில், கரும்பு வெட்டு கூலி அதிகரித்து வருகிறது. இதனால் கரும்பு வெட்டும் எந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கலெக்டருக்கு நன்றி

கூட்டத்தின் முடிவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 195 மி.மீ. ஆனால் பெய்த மழையளவு 312.10 மி.மீ. ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்போது 3,647 எக்ேடர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மைத்துறை மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நில அளவைத்துறை மூலம் நிலத்தை உட்பிரிவு செய்ய நோட்டீஸ் அனுப்பினால் மனுதாரர் வந்து நிலத்தை அளந்து கொள்ள வேண்டும், என்றார்.

முன்னதாக பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கு சிறப்பாக செயலாற்றிய கலெக்டருக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் விசுவக்குடி-தொண்டமாந்துறை இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு தமிழக அரசிற்கும், கலெக்டருக்கும் விசுவக்குடி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்