நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-09 08:28 GMT

சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு, பள்ளி சாலை 4-வது தெருவில் மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகிறார்.

கடந்த 6-ம் தேதி உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரகு விழுப்புரம் சென்றுவிட்டார். பூங்காவில் சோனியா மற்றும் சுதக்ஷா மட்டும் இருந்துள்ளனர். இந்தநிலையில் மாலையில் பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர், தான் வளர்க்கும் 2 'ராட்வீலர்' ரக நாய்களுடன் பூங்காவுக்கு வந்தார். நாய்களை கயிறு கட்டி அழைத்து வராமல் சாதாரணமாக எந்த வித பாதுகாப்பும் இன்றி புகழேந்தி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பூங்கா உள்ளே விளையாடிக்கொண்டிருந்த காவலாளியின் மகளான சுதக்ஷாவை, புகழேந்தியின் 2 நாய்களும் கடுமையாக கடித்து குதறின. நாய்கள் கடித்ததில் சிறுமியின் கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ராட்வீலர் நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமி சுதக்ஷாவுக்கு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. பிற்பகலுக்கு பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அறுவை சிகிச்சை முன்கூட்டியே நடந்து முடிந்தது. சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருப்பதாகவும், வரும் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்