மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது ‘அரோகரா’ கோஷமிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மருதமலை
கந்தசஷ்டி விழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது 'அரோகரா' கோஷமிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு அங்கமான மருதமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின்னர் தினமும் காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. மேலும் சத்ரு சம்ஹார வேள்வி, விநாயகர் பூஜை, சண்முகார்ச்சனை நடந்தது. மேலும் கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
குதிரை வாகனம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 3 மணியளவில் மூலவரிடம் இருந்து வேல் வாங்கி பச்சைநாயகி அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் அம்மனிடம் இருந்து வேலை பெற்றுக்கொண்டு முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன்புறம் எழுந்தருளினார். மேலும் வீரபாகு தேவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவர்கள் கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர்.
மகா அபிஷேகம்
இதையடுத்து முருகப்பெருமான் முதலில் தாரகாசூரனை வதம் செய்தார். 2-வதாக பானுகோபனை வதம் செய்தார். 3-வதாக சிங்கமுகாசுரனை வதம் செயதார். 4-வதாக சூரபத்மனை தனது வேலால் தலையை துண்டித்து வதம் செய்தார். அப்போது கோவில் வளாகத்தில் திரளாக கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட்டு தரிசித்தனர்.
அதன்பின்னர் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்கு கூட்டம், கூட்டமாக பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று திருக்கல்யாணம்
இதைத்தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு யாக சாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் பூஜை, புண்யாகம், கலசங்கள் ஆவாகனம், வேள்வி பூஜை நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் மொய்ப்பணம் வைத்தல், பாத காணிக்கை செலுத்துதல், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
போலீஸ் பாதுகாப்பு
விழாவையொட்டி பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் உத்தரவின்பேரில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலைக்கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக அதிகளவில் மினி பஸ்கள் விடப்பட்டது. அதில் பக்தர்கள் பயணம் செய்து மலைக்ேகாவிலுக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்த தால் இருந்ததால் மருதமலை அடிவாரம் மற்றும் மலைக்கோவில் பக்தர்களால் நிரம்பி இருந்தது.
விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.