சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு இடம் இல்லை - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு இடம் இல்லை எனவும் மதுரையில் அளித்த பேட்டியின்போது, எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-02-23 20:55 GMT


சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு இடம் இல்லை எனவும் மதுரையில் அளித்த பேட்டியின்போது, எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அற்புதமான தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி உள்பட 51 ஜோடிகளுக்கு, மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ெஜயலலிதா கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டில் இன்றைக்கு அற்புதமான தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். பொதுக்குழு நடைபெற்றது செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நல்ல தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது.

இந்த தீர்ப்பு 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், எனக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அதனால் அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2-வது தர்ம யுத்தம் நடத்தப் போகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருப்பதை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒற்றை தலைமை என்ற அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஒரு சில நபர்களை தவிர

இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றி கிடைக்காது என்று டி.டி.வி.தினகரன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்கள் கட்சியைப் பற்றி பேச அவருக்கு தகுதியும் இல்லை. தேவையும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ளவர்களை எங்களுடன் இணைவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அ.தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் தாராளமாக வரலாம். ஒரு சில நபர்களைத் தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க. வரவேற்கும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் வந்தால் ஏற்று கொள்வீர்களா என்று கேட்கிறீர்கள். அதுதான் இல்லை என்று ஆகி விட்டதே. சுப்ரீம் கோர்ட்டு வரை கொண்டு போய் விட்டார்களே. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது, இந்த ஆட்சி 2 மாதம், 6 மாதம் நீடிக்குமா? என்று விமர்சித்தார்கள். ஆனால், 4 ஆண்டுகள் 2 மாதம் சிறப்பான ஆட்சி ெகாடுத்தோம்.

ஒட்டுமொத்தமாக கணக்கிட்டுப்பார்த்தால், நாங்கள் வெறும் 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்தோம். தி.மு.க. வரலாற்று வெற்றி எல்லாம் பெறவில்லை. எனவே மீண்டும் ஆட்சியை தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு பிடிப்போம். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி குறித்து மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

ஈரோடு தேர்தலில் எதிரொலிக்கும்

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் அ.தி.மு.க.விற்கு கிடைந்த இந்த வெற்றியானது,, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் எதிரொலிக்கும். நிச்சயம் வெற்றி என்ற செய்தி வரும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

இப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதே எங்கள் இலக்கு. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்