சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் -ஓ.பன்னீர்செல்வம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.;
பெரியகுளம்,
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வெளியான நேரத்தில் இருந்தே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வரத்தொடங்கினர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ஆதரவாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விரைவில் அறிக்கை
இதற்கிடையே திண்டுக்கல்லில், தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துெகாள்வதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-ஒன்றரை கோடி ெதாண்டர்கள் என் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?
பதில்:-தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
கேள்வி:-சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளீர்களா?, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்:- இதுகுறித்து ஒரு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.