சுப்ரீம் கோர்ட்டு உணவகத்தில் நவராத்திரியையொட்டி சைவ உணவு வழங்குவதா? கி.வீரமணி கண்டனம்

திராவிடர் கழக செயற்குழு கூட்டம் பெரியார் திடலில் நடந்தது

Update: 2024-10-08 08:48 GMT

சென்னை,

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடலில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 26-ந்தேதி அன்று ஈரோட்டில் சிறப்புடன் நடத்துவது. தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இப்பிரச்சினைக்கு சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.'புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்' எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.ஒன்றியத்தில் ஆளும் மைனாரிட்டி பா.ஜ.க. அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு சுற்றறிக்கை விடுத்து உள்ளது.அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள "ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்சித் பாரத்"ஆகிய தலைப்புகள் சர்ச்சைக்குரியவை.மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மாணவர் விரோதப் போக்காகும், வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.'நவராத்திரி விழா' என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இது தவறான முன்னுதாரணமாகி விடும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடும் வழக்கறிஞர்ககளின் கருத்துக்கு உரிய மதிப்பு அளித்து, உணவு கட்டுப்பாடு விதிக்கும் செயலை தடுத்து நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்