எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்றல் கற்பித்தலுக்கான துணை உபகரணங்கள் நேற்று ஈரோட்டுக்கு வந்தடைந்தது
துணை உபகரணங்கள்
சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்றல் கற்பித்தலுக்கான துணை உபகரணங்கள், ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்திற்கு நேற்று வந்தது.
இதுகுறித்து ஈரோடு வட்டார கல்வி அதிகாரி மேகலா தேவி கூறியதாவது:-
ஈரோடு வட்டாரத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் 100 தொடக்க பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்காக இந்த துணை உபகரணங்கள் வந்துள்ளது. மாணவ- மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்றல் கற்பித்தலை எளிதாக புரிய வைக்க, துணை உபகரணங்கள் பயன் உள்ளதாக இருக்கும்.
200 பெட்டிகள்
ஈரோடு வட்டாரத்துக்கு 200 பெட்டிகளில் உபகரணங்கள் வந்துள்ளது. அந்த பெட்டிகளில் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான தமிழ், ஆங்கிலம், கணிதம் எழுத்து அட்டை, சொல் அட்டை, எண் அட்டை, பட விளக்க அட்டைகள் உள்ளன. மேலும், கணித உருவங்களின் முப்பரிமான மாதிரிகளும் வந்துள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கும்போது அவர்களின் கற்றல் திறன் மேம்படும்.
இந்த உபகரணங்கள் வருவது தொடர்பாக தொடக்க பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். தற்போது பள்ளிக்கூடங்களில் இருந்து ஆசிரிய, ஆசிரியைகள் இங்கு வந்து கற்றல் கற்பித்தலுக்கான துணை உபகரணங்களை பெற்று செல்கின்றனர். நாளைக்குள் (அதாவது இன்று) அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இந்த துணை உபகரணங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.