நவாஸ்கனி எம்.பி.யின் ஆதரவாளர் கைது

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டரை கீழே தள்ளிவிட்ட நவாஸ்கனி எம்.பி.யின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-18 18:45 GMT

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டரை கீழே தள்ளிவிட்ட நவாஸ்கனி எம்.பி.யின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர்-எம்.பி. இடையே வாக்குவாதம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் விளையாட்டுத்துறை சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். மாலை 3 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே கலெக்டர், அமைச்சர் வந்ததால் விழா தொடங்கியது.

இந்தநிலையில் விழா அரங்கிற்கு வந்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விழாவை முன்னதாகவே நடத்துவது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து கலெக்டரிடம் கேட்டார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி.யை சமரசம் செய்ய முயன்றபோது, அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டரும் எம்.பி.யை சமாதானப்படுத்த முயன்றார். அந்த சமயத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலெக்டர் கீழே விழுந்தார்

அப்போது யாரும் எதிர்பாராதவகையில் நவாஸ்கனி எம்.பி.யுடன் வந்திருந்த அவரின் ஆதரவாளர் ஒருவர் திடீரென்று கலெக்டர் விஷ்ணுசந்திரனை கையால் தள்ளிவிட்டார். இதில் நிலைதடுமாறிய கலெக்டர் பின்னால் இருந்த நாற்காலியில் போய் விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சுதாரித்து எழுந்து நின்றார். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

அரசு விழா ஒன்றில் நடந்த தள்ளுமுள்ளு நிகழ்வின்போது கலெக்டரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவாளர் கைது

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நவாஸ்கனி எம்.பி.யுடன் வந்த அவரது ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வடக்கு மூக்கையூர் பகுதியை சேர்ந்த விஜயராமு(வயது 42) மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் நேற்று காலை அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்