வேளாண் கல்லூரியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தேவதானப்பட்டி அருகே வேளாண் கல்லூரி வளாகத்தில் கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பெரம்பலூரை சேர்ந்த சந்திரசேகர் மகன் அருணா பல்தேவ் (வயது 19). இவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அவர், சக மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர் ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று குள்ளப்புரம் வேளாண் கல்லூரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அருணா பல்தேவ் இறந்த கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இருந்தனர்.