குழந்தைகளின் முதல் ரோல்மாடல் பெற்றோர்தான்போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு

குழந்தைகளின் முதல் ரோல்மாடல் பெற்றோர்தான் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

Update: 2023-02-13 18:45 GMT

நாகர்கோவில், 

குழந்தைகளின் முதல் ரோல்மாடல் பெற்றோர்தான் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

விழிப்புணர்வு ஓவியம்

போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போதைபொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்புமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவித்திருந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தனர். அதன்படி 6 ஆயிரத்து 110 ஓவியங்கள் வந்திருந்தன.

33 மாணவர்களுக்கு பரிசு

அவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள 8 வகுப்பறைகளில் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பார்வையிட்டனர்.

இந்தநிலையில் ஓவிய போட்டியில் சிறந்த ஓவியங்கள் வரைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேர், பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேர் என மொத்தம் 33 பேர் வெற்றி பெற்றதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மகன் நிஸ்விக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகளின் ரோல் மாடல் பெற்றோர்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கூடுதல் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேச வேண்டும். அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் முதல் ரோல் மாடல் ஹீரோ பெற்றோர்கள் தான்.

குழந்தைகள் செல்போனில் அதிக நேரத்தை செலவிடக்கூடாது. செல்போனை தங்களது வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும். படிப்புடன் சேர்த்து விளையாட்டுகளிலும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

குழந்தைகளுடன் பெற்றோர் கூடுதல் நேரம் செலவழிப்பதால் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தங்களது குழந்தைகளை பிற மாணவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைபர் செல் (இணையதள குற்றத் தடுப்பு பிரிவு) சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்