கடலூாில் பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு

கடலூாில் பசியோடு வந்த முதியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு உணவு வாங்கி கொடுத்தாா்.

Update: 2023-08-11 18:45 GMT

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது 80 வயது முதியவர் ஒருவர் அழுதபடி மனு அளிக்க வந்தார்.

இதை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஏன் அழுகிறீர்கள் என கேட்டார்.

அப்போது அவர், தான் கடலூர் ஆனைக்குப்பத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 80) என்றும், காலையில் சாப்பிடவில்லை எனவும், எனது மகன் மற்றும் மகள் இருவரும் சாப்பிடுவதற்கு பண உதவி செய்ய மறுக்கிறார்கள் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், அந்த முதியவரின் கையை பிடித்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் சிற்றுண்டி விடுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த முதியவருக்கு தனது சொந்த செலவில் காலை உணவு வாங்கி கொடுத்தார்.

இதையடுத்து அந்த முதியவர் சாப்பிட்டு முடித்ததும், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், புகார் சம்பந்தமாக உங்களது மகன் மற்றும் மகளிடம் விசாரணை நடத்தி, வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனால் பால்ராஜ், போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி தெரிவித்து சென்றார். இதற்கிடையே பசியோடு வந்த முதியவரை, போலீஸ் சூப்பிரண்டு அழைத்து சென்று காலை உணவு வாங்கி கொடுத்தது பற்றி அறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரது செயலை பாராட்டி, அவருக்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்