நரியை பரியாக்கிய கோலத்தில் காட்சி அளித்த சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுத்தோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்

Update: 2023-08-26 20:32 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுத்தோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்

ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று மாலை நரியை பரியாக்கிய லீலை நடந்தது. அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் தங்க குதிரையிலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர். விழாவில் பாண்டிய மன்னாக சிவேஷ் பட்டர் குதிரையில் வந்து லீலை குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.

திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் சுவாமியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நரியை பரியாக்கிய லீலை

விழாவில் நரியை பரியாக்கிய லீலை புராண வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது மன்னன், படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்குவதற்காக பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தார். அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என தான் கொண்டு வந்த அனைத்து முழுப்பொருளையும் செலவிட்டார்.

இந்த நிலையில் மன்னனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னனிடம் கூறும் படி தெரிவித்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.

நரிகளை குதிரைகளாக்கினார்

மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார். உடனே இறைவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைகளின் பாகர்களாக்கி, தானே அவைகளுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதை கண்ட மன்னனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தான்.

ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின. உடனே மன்னன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்க செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்