திருவெண்ணெய்நல்லூர்கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.

Update: 2023-07-26 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் என்ற சுந்தரர் குரு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் வழக்கு வென்ற அம்பலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கோலமாய் எழுந்தருளி ஆவணம் காட்டி அடிமை சாசனம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும், நாகராஜசிவம், சுந்தரஅருணகிரி ஆகியோரின் சுந்தரர் தடுத்தாட்கொண்ட வரலாறு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான நேற்று சுந்தரர் குருபூஜை நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகல் 12 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அபிஷேக, ஆராதனையும், அன்னத்தால் லிங்கம் அமைத்து பழங்கள் படையலிட்டு மகேஸ்வரர் பூஜையும், சுந்தரர் குருபூஜையும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு சிவ தீர்த்தத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி முதலைவாய் பிள்ளை தருவித்து என்ற ஐதீக நிகழ்ச்சியும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெள்ளை யானை மீது வீதி உலா, சேரமான் நாயனார் குதிரை மீது வீதி உலா, திருக்கயிலாய தரிசனம் அருளுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்