2 கும்கி யானைகள் வரவழைப்பு
தேவாலா பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனத்துறையினர் தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்,
தேவாலா பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனத்துறையினர் தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கும்கி யானைகள்
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர், பாரதி நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை உடைத்தது. இதேபோல் தேவாலா அருகே வாழவயல் பகுதியில் ஒரே நாள் இரவில் 7 தொழிலாளர்களின் வீடுகளை 2 காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கண்டித்தும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும், விரட்டவும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து விஜய், கிரி என்ற 2 கும்கி யானைகள் தேவாலா வாழவயலுக்கு கொண்டு வரப்பட்டது.
வனத்துறையினர் கண்காணிப்பு
தேவாலா வனத்துறையினருடன் இணைந்து பணியாற்ற முதுமலையில் இருந்து கூடுதலாக 10 வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தொ டர்ந்து தேவாலா வனச்சரகர் அய்யனார் தலைமையிலான வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேவாலா அருகே நீர்மட்டம் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது.
அந்த யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க தொலைநோக்கி உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்தனர். மேலும் வாழவயல் பகுதியில் கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இருப்பினும் இரவில் தனியாக வெளியே செல்லக்கூடாது என்றனர்.