முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 8 பேருக்கு சம்மன்

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீதான போக்சோ வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட 8 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் ஊட்டி கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2022-12-28 18:45 GMT

ஊட்டி, 

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீதான போக்சோ வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட 8 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் ஊட்டி கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

போக்சோ வழக்கு

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராபர்ட். இவர் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவரின் 14 வயது மகளுக்கு ராபர்ட் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மூலம் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் போக்சோ வழக்கு குறித்து மீண்டும் விரிவாக விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று கூடலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் சார்பில் ஊட்டி மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை முடிவில், நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய முரளி ரம்பா உள்பட 8 போலீசார் வருகிற ஜனவரி 9-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சம்பந்தமாக முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு சி.பி.சி. ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்