மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில், வருகிற 15-ந் தேதி முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில், வருகிற 15-ந் தேதி முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
குளுகுளு சீசன்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. மேலும் பொதுத்தேர்வுகளுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே கோடைகால சிறப்பு மலைரெயில் இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிறப்பு மலைரெயில்
அதன்படி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலைரெயில்(வண்டி எண்: 06171) வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை 11 சனிக்கிழமைகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு(வண்டி எண்: 06272) வருகிற 16-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
சனிக்கிழமை காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலைரெயில் கல்லார், ஹில்குரோவ், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.
இதேபோன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் மலைரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது.