புதுக்கோட்டையில் கோடை மழை

புதுக்கோட்டையில் கோடை மழை பெய்ததில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-26 18:34 GMT

சுட்டெரித்த வெயில்

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால் புதுக்கோட்டையின் நகரப்பகுதி உள்பட சுற்றுவட்டாரங்களில் மழை பெய்யாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவிலும் லேசாக காற்று வீசியபடி இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்த மக்களுக்கு இந்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மழைநீர் தேங்கியது

இந்த மழையினால் உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கியது. மேலும் மின்சார வாரிய அலுவலக வளாகம் உள்பட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் கழிவுநீரோடு, மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஒரு சில இடங்களில் ஓடியது. மழைநின்ற பிறகு சகஜ நிலை ஏற்பட்டது.

காலையில் பெய்த திடீர் மழையினால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தப்படி சென்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ரெயின்கோட் அணிந்தப்படியும், குடையை பிடித்தப்படியும், சிலர் மழையில் நனைந்தப்படியும் சென்றதை காணமுடிந்தது. மழை நின்றபின் சிறிது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்பு லேசாக வெயில் அடித்தது. திடீர் கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

இந்த மழையின் போது பயங்கர இடி, மின்னல் இருந்தது. இதில் மின்னல் தாக்கியதில் ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ஆறுமுகத்தின் புதிய வீடு கட்டிடத்தின் மேல் பகுதியிலும், பழைய வீட்டில் மேற்கூரை, வீட்டினுள் டி.வி. உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான தூறல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் திருவரங்குளத்தில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்