பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கலை பயிற்சி முகாம் தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கலை பயிற்சி முகாம் தொடங்கியது.

Update: 2023-05-05 19:16 GMT

திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும், மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை கால கலை பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு இசை பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் வழிக்காட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் நடராஜன் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் ஆகிய கலைகளுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. வருகிற 14-ந் தேதியுடன் இந்த முகாம் நிறைவடையும் நிலையில், அன்று கலை பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் ஆகிய கலை பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்