சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

Update: 2022-07-09 15:54 GMT


சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் சாகுபடி

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்கிறார்கள். இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காய விலை வீழ்ச்சியடைந்ததால், விலை சரிவிலிருந்து தப்பிக்க விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து வந்தனர்.

இதுகுறித்து வெங்காய விவசாயிகள் கூறியதாவது:-

பட்டறை அமைத்து பாதுகாப்பு

ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட விதை வெங்காயம், உரம், பூச்சி மருந்து, நடவு கூலி, அறுவடைக் கூலி என ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த நிலையில் நல்ல விளைச்சல் இருந்தால் 6 டன் வெங்காயம் கிடைக்கும். ஆனால் 4 முதல் 5 டன் வரை சின்ன வெங்காயம் விளைச்சல் கிடைக்கிறது.

சில மாதங்களுக்கு முன் வெங்காய விலை வீழ்ச்சியடைந்ததால், விலை சரிவிலிருந்து தப்பிக்க சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து வந்தோம். ஆனால், வெங்காய விலை உயரவில்லை. மேலும் இருப்பு வைத்த வெங்காயம் எடை குறைந்தும் வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

இதற்கு மேலும் வெங்காயம் விலை குறைவு ஏற்பட்டால் விவசாயிகளிடமிருந்து தமிழக அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் வெங்காய ஏற்றுமதி அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்