பனி சீசனையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சுக்கு காபி

பனி சீசனையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவசமாக சுக்கு காபி வழங்கப்படுகிறது.

Update: 2022-11-28 20:48 GMT

பழனி,

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியாக தான் சென்று வருகின்றனர்.

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் இருக்க சுக்கு காபி வழங்க முடிவு செய்யப்பட்டது.

குளிருக்கு இதமாக சுக்கு காபி

அதன்படி தற்போது படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகே வைத்து சுக்கு காபி வழங்கப்படுகிறது. பக்தர் ஒருவருக்கு தலா 100 மில்லிலிட்டர் வீதம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதனை பக்தர்கள் ஆனந்தமுடன் வாங்கி பருகி செல்கின்றனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது காலை நேரத்தில் குளிர் வாட்டி எடுக்கிறது. அந்த குளிரை விரட்டும் வகையில் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்படுகிறது. தினமும் சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்