மகன், பேத்தியுடன் பெண் தற்கொலை முயற்சி

எடப்பாடி அருகே குடும்ப பிரச்சினையால் மகன், பேத்தியுடன் பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-13 19:54 GMT

எடப்பாடி

எடப்பாடி அருகே குடும்ப பிரச்சினையால் மகன், பேத்தியுடன் பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவருடன் கருத்து வேறுபாடு

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம், பாறைக்காடு மேடு அருகே உள்ள பச்சையப்பன் காலனியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 50). இவருக்கு பிரகாஷ் (25) என்ற மகனும், நித்யா (32) என்ற மகளும் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நித்யாவிற்கும், தேவண்ணக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோஷிணி (12) என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வந்த நித்யா தனது மகள் ரோஷிணியுடன் தனது தாயார் மஞ்சுளா மற்றும் தம்பி பிரகாஷ் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

கொரோனாவுக்கு பலி

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யாவிற்கும், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நித்யா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் செல்வம் இறந்து விட்டார். இதனால் நித்யா மீண்டும் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நித்யா மீண்டும் திடீரென காணாமல் போனதை அடுத்து, தாயார் மஞ்சுளா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். போதிய வருமானம் இன்றி தவித்து வந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் மனக்கசப்புகளால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் உணவு சமைத்த மஞ்சுளா, அதில் விவசாய பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து சாப்பிட்டார்.

அதன்பிறகு தனது மகன் பிரகாஷ் மற்றும் பேத்தி ரோஷிணி ஆகியோருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவர்கள் தொடர்ந்து எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்