கடன் தவணை தொகையை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியர்கள் கூறியதால் தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-30 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் கடன் தவணை தொகையை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியர்கள் கூறியதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

தர்மபுரி நரசையர் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 47). தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெயவேல் தர்மபுரியில் செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளார். அந்த கடன் தொகையை மாதந்தோறும் தவணைகளாக திருப்பி செலுத்தி வந்தார்.கடந்த 3 மாதங்களாக கடன் தவணை தொகையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடன் தவணை தொகையை செலுத்துமாறு ஜெயவேலிடம் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிதி நிறுவன ஊழியர்கள் ஜெயவேலின் வீட்டுக்கு வந்து கடன் தொகையை செலுத்துமாறு கூறிவிட்டு சென்று உள்ளனர்.

தற்கொலை

இந்த நிலையில் மன உளைச்சலுடன் வீட்டில் தனியாக இருந்த ஜெயவேல் ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஜெயவேலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஜெயவேல் இறந்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று ஜெயவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தவணை தொகையை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்